கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! –. நாள் # 15

08/04/2020, புதன்

காலை மணி 08 : 00

வீட்டில் பழங்கள், தேங்காய், தயிர் என பல பொருட்கள் தீர்ந்துவிட, கடைவீதிக்குச் செல்ல சீக்கிரம் எழுந்தேன் !

நிறைய காய்கறிக்கடைகள், பழக்கடைகள் முளைத்திருந்தன.  பூ விற்பவர், வெற்றிலை பாக்கு கடைக்காரர், இஸ்திரி போடுபவர் உட்பட பலரும், மொத்த விலைக்கடைகளிலிருந்து, காய்கறிகள், பழங்கள், நொறுக்குத்தீனி, பிஸ்கட்களை வாங்கி விற்பவர்களாக மாறியிருந்தனர்.  அத்தியாவசியப் பொருட்கள்  விற்பவர்களைத் தவிர வேறாரும் கடைகளைத் திறக்கக் கூடாதென்பதால், அவர்கள் கூடு மாறியிருந்தார்கள் !

அருகே, டீ விற்றுக் கொண்டிருந்தவர் மேல் இரண்டு வழக்குகளை காவல்துறை போட்டதாம்.  வீட்டில் சும்மா இருக்கும் ஆட்கள் வெட்டிக்கதைகள் பேசிக் கூட, டீக்கடைகளைத்தான் நாடி வருகிறார்கள் என்பதற்காக இந்த அதிரடி. மனிதர் அனைத்தையும் ஏறக்கட்டிவிட்டு ஆப்பிள், திராட்சைப் பெட்டிகளால் கடையை நிரப்பியிருந்தார் !

பொதுவாக இந்த வியாபாரம் அதிகச் சவால்களைக் கொண்டது.  விற்காமல் மீந்துபோனால் அவர்களுக்கு அதைக் கெடாமல் பாதுகாக்க எந்தச் சாதனங்களுமில்லை.  முன் அனுபவங்களுமில்லை.  ஆனால், இப்போது கொண்டுவரப்படும் அனைத்துப் பொருட்களும், கடைகள் திறக்க விதிக்கப்பட்டிருக்கும் காலக் கெடுவுக்குள் தீர்ந்துவிடுகிறது.  கணிசமான லாபமுமிருக்கிறது.   இந்தச் சாமர்த்தியம் அவர்களை வாடாமல் பாதுகாப்பது கொஞ்சம் மகிழ்ச்சி !

காலை மணி 11 : 15

பெரிய மார்க்கெட் போய் மீன் வாங்கி வரலாம் என்றார் கீழ் ப்ளாட் நண்பர்.  சரியெனக் கிளம்பினோம்.  போகும் வழியில் சில தெருக்களை முழுமையாக சீல் வைத்திருந்தார்கள்.  சந்து பொந்தாகச் சுற்றி சுற்றியே மார்க்கெட்டை அடைய முடிந்தது.

மணிகண்டன் தெரு ஐந்தாவது சந்திலிருந்த ரேஷன் கடையொன்றில் கடுமையான நெரிசல்.  ஒரு காவலர் கூட அங்கு பாதுகாப்புக்கு இல்லை.  ஏன் தெரியுமா ?

ஆயிரம் ரூபாய் ரொக்கம் தரும்வரை மட்டுமே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறலாமென காவலர்கள் வந்திருந்தார்கள்.  முடிந்ததும் போய்விட்டார்கள்.  இப்போது அரிசி, சர்க்கரை,  பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் இலவசமாக, கொரோனா நிவாரணமாகத் தரப்படுவதால், ஏகப்பட்ட கூட்டம் !

தனி மனித விலகலுக்காக, பெயிண்டால் வட்டங்கள் பல அடி இடைவெளியில் வரையப்பட்டிருந்தும் என்ன உபயோகம் ?  முன் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை ரக ரேஷன் விநியோக சிஸ்டம் நம்முடையது.  வழக்கமாக ரேஷன் பொருட்களை வாங்கும் மக்களுக்கு அது புரியும்.  பண விநியோக விஷயத்தில் உரியவர்கள் அனைவருக்கும் பணமுண்டு என உத்திரவாதம் தரும் அரசு, பொருட்கள் விஷயத்தில் கொஞ்சம் அலட்சியமாகத்தான் இருக்கும்.  அதற்கு பல காரணங்கள் உண்டு !

எடை குறைவாக கடைக்காரர்களுக்கு தரப்படும் சரக்கை அவர்கள் முணுமுணுக்காமல் இறக்கி, பில்லில் இருக்கும் எடைக்கு சரக்கு வந்துவிட்டதாய் கையெழுத்திட வேண்டும்.  இந்த எடையிழப்பு வருவாயை, அவர்கள் எப்படி சரி கட்டுவார்கள் ?  தாமதமாக வருபவர்களுக்கு அதில்லை இதில்லை என்று கூறிவிட்டு, கொடுக்காமல் பதுக்கி வைப்பதை கள்ளச்சந்தையில் விற்பார்கள் !

ஒரு கிலோ பருப்பை எண்பது ரூபாய்க்கு வாங்கி, அதை மானியத்தில் 30 ரூபாய்க்கு நமக்கு அரசு கொடுக்கும்.  இப்படி தீர்ந்துவிட்டதெனப் பொய் கூறி, மிச்சமாகும் பருப்பை இவர்கள் கள்ளச்சந்தையில் 60 ரூபாய்க்கு விற்பார்கள்.  லோடு லோடாய் சிக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்களை நீங்கள் அடிக்கடி செய்தித்தாள்களில் வாசிப்பீர்கள் இல்லையா ?  அதெல்லாம் ஆங்காங்கே ரேஷன் கடைகளில், சமூகவிரோதிகள் சிலர் வாங்கி, அவை  கிடங்குகளில் பதுக்கப்பட்டு இப்படி ஏற்றப்பட்டுச் சிக்குபவைகளே.  ஆனால் நூறில் ஒன்று இப்படி கணக்குக்காகச் சிக்கும் !

சரி, இது ஒன்றும் புதிதாக நடைபெறுவதல்ல.  காலம் காலமாக யாராண்டாலும் நடைபெறுவதுதான்.  ஆனால், கடும் நெருக்கடியான சூழ்நிலையில்,  நாடெங்கும் அதிகப் பட்டினிச் சாவுகள் அரங்கேறக்கூடிய அவல நிலையிலும், நாங்கள் அப்படித்தான் வாளாவிருப்போமென எப்படி ஓர் அரசால் செயல்பட  முடிகிறது ?

வெறுமனே நாங்கள் அதைக் கொடுத்தோம், இதைக் கொடுத்தோமென பட்டியல் போட்டுவிட்டு,  ‘ இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ‘ என ஒரு பின்னணி பாட்டையும் போட்டுக்கொண்டு,  வாட்ஸ்அப்பில் அதைப் பரப்பி, மோடித்தனமாய் பாமர மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்துவிட்டார்கள் போல ?

எடப்பாடி அய்யா, இவ்வளவு பாடுபட்டு பலர் தங்கள் வாழ்வாதாரங்களை கடந்த பதினைந்து நாட்களாக முழுவதுமாக இழந்து, வீட்டில் முடங்கி வெற்றிக்கு அருகில் வந்துவிட்ட நிலையில், அவர்களை இவ்வளவு நெரிசலாக நிற்கவிட்டு எத்துணை பெரிய தப்பைச் செய்துக் கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா ?

ஆமாம், நாம் என்ன விளம்பரம் செய்தாலும், பசிக்கு முன்னே இந்தக் கொலைகாரப் பிணி அவர்களுக்கு கால் தூசுதான், அதைப்பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை.  இன்றே வாங்கினால்தான் அரிசி, பருப்பு என்கிற நிலையில் அவர்கள் எப்படி வட்டத்தில் நிற்பார்கள் ?  இப்போதல்லவா நீங்கள் நிறைய காவலர்களை பாதுகாப்பு பணிகளுக்கு நியமித்திருக்க வேண்டும் ?

நீங்களே அவர்களை தனி மனித விலகலில்லாமல் நிற்கத் தூண்டிவிடலாமா ??

மாலை மணி 06 : 30

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று செய்திகளுக்கிடையே,  நம் சென்னை G H ராஜிவ்காந்தி மருத்துவமனையில்,  கோவிட் 19 வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டு, தங்களின் சிறப்பான சிகிச்சையால் குணமான 72 வயது பெண்மணியை, வீட்டுக்கனுப்பும் நிகழ்வை, எளிமையான விழாவாக நடத்தி, நம்மை நெகிழ்ச்சியுறச் செய்தனர் அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் !

கூடை நிறைய பழங்களை பரிசாக அளித்து, கரவொலி எழுப்பி, அவர் டிஸ்சார்ஜ் ஆனார்.  இதில் என்ன உன்னிப்பாக கவனிக்க வேண்டிய சேதியெனில், அந்தப் பெண்மணிக்கு கட்டுப்படுத்தாத நீரிழிவு இருந்திருக்கிறது.  அதாவது அந்தம்மா தனக்கிருந்த சர்க்கரை அளவைக் கண்டுகொள்ளவே இல்லை.   உயர் ரத்த அழுத்தமும் இருந்ததாம்.  கொரோனா தொற்றுக்கு தொக்கான உடலே இதுதான்.  ஆனால் அதையே அனாயசமாக நம்ம மருத்துவத்துறையும்,  நீட்டில் படித்து வராத தரமான தமிழக மருத்துவர்களும்  வென்று காட்டியிருக்கிறார்கள் !

நம்பிக்கையை அதிகரித்த, நிறைவான ஒரு நாளாக இது அமைந்தது !

 

தொடரும்

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்