கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 35
28/04/2020, செவ்வாய்
காலை மணி 10 : 00
ஓரிரு நாளிதழ்கள் எப்போதும் போல வந்துக் கொண்டுதானுள்ளன. கீழ்வீட்டின் பாண்டியன் சார் அழைத்தார்.
” முன்னெல்லாம் தினத்தந்தியை கேட்டு வாங்கி படிப்பீங்க, அந்தச் சாக்கிலயாவது ஏதாவது நாட்டு நடப்பப் பேசுவோம், இப்பல்லாம் வர்றதேயில்ல. பொம்பளைகளாவது என்ன சமையல், என்ன செஞ்சீங்கன்னாவது பேசிக்கிறாங்க, வீட்லதான் இருக்கீங்க, கடகன்னிக்கு போறீங்க, ஆனா கண்டுக்கவே மாட்றீங்களே தம்பி ? ”
” தப்பா எடுத்துக்காதீங்க சார், வெளியவே தலை காட்டாதங்கிறான், கொஞ்சம் அவன் சொல்றதைக் கேப்போம்ன்னுதான்
” ஏன் தம்பி, நமக்கு தந்திதான், நாப்பது வருஷமா படிக்கிறேன் ”
” ஆபிஸ்ல இந்து தமிழ் வாங்கறேன், அதுவும் இப்ப போகாததால வாங்கறதில்ல. பேப்பர், டிவி இல்லைன்னா நிம்மதியா இருக்கலாம் போல ? ”
” ம்க்கும், எங்க நீங்கல்லாம்தான் பொழுதன்னிக்கும் செல்ஃபோனோட குடும்பம் நடத்துறீங்களே ? எப்படி நிம்மதி வரும் ? ”
” அதென்னமோ உண்மைதான் போங்க. சரி என்ன ஸ்பெஷல் இன்னிக்கு தந்தில ”
” கொரோனாவ விட்டா வேறென்ன இருக்கப் போகுது ? இந்தா இந்தக் கியூவ பாத்தீங்களா, இத மட்டும் படிங்க, நாமெல்லாம் சொர்க்கதில வாழ்றது தெரியும் ”
காலை மணி 11 : 00
அவர் ஆசையைக் கெடுப்பானேன் எனத் தந்தியை நுனி விரல்களால் கவ்வியபடி வீட்டுக்குள் வந்து சானிடைசரால் கைகளைத் துடைத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். அவர் குறிப்பிட்ட சொன்ன அந்தக் கியூ சம்பவம் குஜராத் சூரத் நகரில் நிகழ்ந்த அவலம்.
சுமார் நாலாயிரம் பேர் ரேஷன் பொருளுக்காக வரிசையில் ஒன்று கூடி நின்றிருக்கின்றனர். ஒரு செ.மீ கூட தனிமனித இடைவெளி கிடையாது. நன்கு நினைவில் வையுங்கள், குஜராத்தான் கொரோனா தொற்றுப் பரவலிலும் சரி, குணமாகுபவர்களின் சராசரியும் சரி மிக மிக மோசமான நிலையில் உள்ள மாநிலம். அதாவது அதி வேகமான பரவல், மிக மோசமான வேகத்தில் சீராகும் விழுக்காடு !
இந்த அழகில்தான் பசி கொடுமை தாங்காமல் உணவுப் பொருட்களுக்காக ஒட்டுமொத்தமாக 4000 பேர் பல மீட்டர் தூரத்திற்கு நெருக்கமாக, 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யிலில் நின்றிருக்கிறார்கள். நரக வதை. வேறு வழியுமில்லை. அது ஓர் அற்புதமான புரதானமிக்க தொழிற்நகரம். ஆனால் துளி வேலை வாய்ப்பில்லாமல் அடுத்த வேளை உணவுக்கு இப்படி யாராவது கொடுத்தால்தான் உண்டு என பல லட்ச மக்கள் தவிப்புடன் இருக்கிறார்கள். ஆனால் அத்தனை மணி நேரம் நின்று, அன்று பாதிபேருக்கு கூட பொருட்கள் கிட்டவில்லை. 1500 பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு, அடுத்து பொருட்கள் வந்தவுடன்தான் என அடித்து விரட்டி கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். பொருட்களும் கிட்டாமல் பசியுடன், தொற்றையும் எத்தனை நூறு மக்கள் தாங்கிக் கொண்டார்களோ ?
வட இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு சராசரி நிகழ்வுதான், ஆனால் இந்தக் குஜராத் மாடலைப் பற்றித்தானே நமக்கு 2012, 2013 களில் கதை கதையாய்ச் சொன்னார்கள் ? அதை எண்ணிப் பார்த்துதான் கண்களில் நீர் திரண்டது !
அந்தப் பொய்களில் ஏமாறதவர்கள் யார் ? நம்ப மாட்டீர்கள். 2014 தேர்தலில் இங்கு வென்றதென்னவோ ஜெயலலிதாதான், ஆனால் மோடி அலை இங்கு 20% வாக்குகளை, தமிழக மண்ணில் அப்போது பெற்றுத் தந்தது. சதுரங்க வேட்டை படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் போல, ஒருத்தனை ஏமாத்தணும்ன்னா அவன் ஆசையைத் தூண்டனும் என்று, சீன நகரங்களையெல்லாம் குஜராத் போல காட்டி, அமெரிக்க மின் திட்டங்களையெல்லாம் அகமதாபாத் மின் திட்டங்களெனச் சொல்லி, லண்டன் இரட்டடுக்கு பேருந்துகளை ராஜ்கோட் பஸ் ஸ்டேண்டில் ஓடவிட்டு படம் காட்டி, சர்வ நாசம் செய்தார்கள் !
இப்ப என்னன்னா அங்க மருத்துவ வசதி பீகார் அளவுக்கு கூட இல்ல, கல்வி அறிவு படு மோசம், ரேஷன் வழங்கும் விதம் மஹா கேவலம், பட்டினிச் சாவு மிகுந்த மாநிலம் என்று அக்கு அக்காக பிரித்து மேய்கிறார்கள். கண்ணாடியில் முகம் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. இவ்வளவு ஏமாளியா இருந்து நாட்டை நாசமாக்கிட்டோமேடா ?
மதியம் மணி 02 : 00
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை என எஸ்.வி.சேகர் எடப்பாடி போட்டோ முன் உருக்கமாக பாடிக் கொண்டிருந்தார்.
இந்தாளுக்குள்ள இருக்கிற சாமர்த்தியத்தை பார்த்தேளா ? சக கட்சிக்காரர்களாலாயே வெகுவாக வெறுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருக்கும் இந்த நபரைப் பற்றி இரண்டு நாளைக்கு ஒருமுறையேனும் பேச என்ன அவசியமிருக்கு ? எவரொருவரும் துச்சமாக மதிக்குமளவு உளறித் தொலைக்கும் இவர் எப்படியோ சில நாட்களுக்கொரு முறை வைரலாகி விடுகிறார்.
ஊரடங்குக்கே ஊரடங்கு திடுக்கென அறிவிக்கப்பட்டு விட்டதால் தன் வீட்டுத் தேவைக்காக 13 பாக்கெட் ஆவின் பால் வாங்கியிருந்திருக்கிறார். குக்கரில் ஊற்றி காய்ச்சும் போது அதில் ஒன்பது பாக்கெட்டுகள் திரிந்து போய் விட்டதாம். இது என்ன கணக்கென்றே தெரியவில்லை. அதாவது ஒட்டு மொத்தமா 13 பாக்கெட் பாலை 13 குக்கரில் ஊற்றி காய்ச்சினாரா – அல்லது ஒன்பது பாக்கெட்களை ஒரே குக்கரில் ஊற்றி காய்ச்சினாரா ?
என்ன எழவோ. இதை அவர் ஆவின் பூத் காரரிடமோ, கடைக்காரரிடமோ போய்ச் சொன்னாரா எனத் தெரியாது. நேரடியாக எடப்பாடி & ஓ பி எஸ்சாரை சேர்த்து ட்வீட் பண்ணியிருந்திருக்கிறார் !
இங்க என்னையப் பாத்தீங்கன்னா இவர் 13 பாக்கெட் வாங்கிய அதே நாளில், ஒரே ஒரு பாக்கெட், வழக்கமா வாங்கற கடைதான், இன்னிக்கு எக்ஸ்ட்ரா ஏழு ரூபா சார் என பிக்பாக்கெட் அவலத்திற்குள்ளானேன். இதை சி எம்க்கோ, ஏசிஎம்க்கோ குறைந்தபட்சம் ராஜேந்திர பாலாஜிக்கோ புகாரளிக்க வேண்டும் என்கிற புத்தி எனக்கில்லை. ஆனால், அவருக்கு எங்க அடிச்சா எங்க வலிக்கும் என்பது நன்கு தெரிந்திருக்கிறது !
ஆமாம், அவரைத் தேடி ஒன்பது பாக்கெட்கள் பாலை ஆவின் நிர்வாக அதிகாரி, வீட்டுக்கே வந்து கொடுத்து, அது காய்ச்சப்படும் வரை உடனிருந்து, கன்ஃபர்ம் செய்தியை சி எம்க்கு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் !
அப்புறம் அவர்கள் ஏன் ரேபிட் கிட் ஊழலைப் பத்திப் பேசப் போகிறார்கள் ?
இரவு மணி 09 : 00
ச்சும்மா சும்மா முதல்வர்களுடன் காணொளி கலந்தாய்வுன்னு துண்டை எடுத்து மூஞ்சி மேல போட்டுக்கிட்டு மோடி வருவது, பல மாநில முதல்வர்களுக்கு கடும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது.
நல்ல பிள்ளை போல, ” தேக்கோஜி, நம்மிள்க்கி பிரஷர் மேல பிரஷரா வருது, பேசாம எல்லாக் கம்பெனிகளையும் திறக்கச் சொல்லிட்டு, ட்ரெய்ன விட்டுடலாம்ன்னு இருக்கேன். நிம்பிள் வேற பணம் கொடு பணம் கொடுன்னு ஃபேக்ஸ் அனுப்புறான் ” என்று மோடி அரைத்த மாவையே அரைக்கத் தொடங்கியவுடன் ;
அர்விந்த் கெஜ்ரிவால், அம்ரிந்தர் சிங், உத்தவ் தாக்கரே போன்றோர் மிரண்டு,
” என்னங்கஜி விளையாட்றீங்க, கொத்து கொத்தா பேஷண்ட் வர்றாய்ங்க, சாவு கூடிக்கிட்டே போகுது, இப்பத் திறந்து விட்டா அவ்வளவுதான் ” என்றவுடன் ;
” பாத்தியா அமித்ஷா, நான் ஓக்கேன்னாலும் இவிங்கதான் தொறக்காதங்கிறாய்ங்க, எல்லா பழியையும் அவங்க மேல தூக்கிப் போட்டு எக்ஸ்டண்ட் பண்ணிட்டு, நீ திறக்க வேணாம்ங்கிறதால கம்பெனில காசு இல்லன்னு ஒரே கல்லுல இரண்டு மாங்கா அடிச்சிர வேண்டியதுதான் ”
இப்படி குஜராத்திகள் தங்கள் சதியாலோசனையிலிருக்க, இவர் என்ன எழவு பேசுறார்ன்னே எனக்கு புரியல, இந்தில்லாம் எனக்கு புடிக்காத பாஷைங்கிறத விட தெரியாத பாஷை என அந்தச் சந்திப்பின் இடையிலேயே வெளியேறிச் சென்றிருக்கிறார் மிசோரம் முதல்வர்.
அவராவது கொஞ்சம் டீசண்ட். நம்ம தோழர் பினராயி, ” தோழர் அவருக்கு எந்த வேலையும் இல்ல, கவலையும் இல்ல, மீட்டிங், கான்பரன்ஸ்ன்னு கதை விட்டுக்கிட்டு டைம் பாஸ் பண்ணுவாரு, நமக்கு இங்க ஆயிரம் வேலை இருக்கு. ஒவ்வொரு வேலைக்கும் நாம போய் முன்னால நிக்கணும். அதனாலத்தான் நாட்டுல கொரோனா தோன்றின முதலிடமா இருந்தாலும் பட்டியலில் கீழ இருக்கோம் ” என்று வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டார்.
தொடரும்
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
- ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
- காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
- மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
- ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
- ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
- ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
- திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
- விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
- ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
- யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
- கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
- எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
- தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
- பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
- இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
- புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
- பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
- மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
- தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
- அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
- ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
- இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
- இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
- இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
- செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
- உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
- ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்
- மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
- கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
- யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
- என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
- '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
- ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
- ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
- டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
- திடீர் தீபாவளி இரவில்......
- ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
- விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
- கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்