தேதி, கிழமை, நேரம். அய்யய்யோ என்ன தேதி, என்ன கிழமைன்னே மறந்து போச்சே ? நேரம் 11 மணி. கண்ணை இன்னும் ஒரு முறை தேய்த்துக் கொண்டு பார்த்தேன், ஆமாம் 11 மணியேதான். இல்லையே, இவ்வளவு நேரம் தூங்க வாய்ப்பே இல்லையே ? நைட்டு சீக்கிரம்ல்ல படுத்தேன், நேத்து மாதிரி நடுவுல விழிப்பும் வர்ல, ஸ்லோவா ? நின்னு போச்சா ? முள் டச்சிக் டச்சிக் என நகர்ந்துக் கொண்டுதானிருந்தது !
அறிவிருக்கா ? இன்னிக்கு ஜாகிங் போகப் போறேன்னுதான சொன்னேன், பதினோரு மணி வரைக்குமா தூங்க விடுவ ?
இப்ப என்ன குடி முழுகிப் போச்சு ? வீட்லதானப் பண்ணப் போறீங்க, போய்ப் பண்ணுங்க. ஜாகிங் போகோணும்ன்னா போறவன்தான் அலார்ம் வச்சி எழுந்திருக்கணும். என்னைப் பாத்தா அலாரம் மாதிரி இருக்கா ? பாவம் மனுஷன் நேத்து தூக்கமில்லாம நடுங்கிக் கெடந்தானேன்னு தூங்க விட்டது என் தப்புதான். மவனே நாளைக்கு நாலு மணிக்கு எழுப்பி விடல, என் பேர மாத்திக்கறேன் !
கூல் டியர். இன்னிக்கு என்ன தேதி ? என்ன நாள் ?
ம்க்கும், நான் என்ன காலண்டரா ?
காலண்டரைப் பார்த்தேன். 25/03/2020, புதன் கிழமை, தெலுங்கு வருடப் பிறப்பு. இத அல்ரெடி எங்கயோ பாத்தாப்பல இருக்கே ? ஏம்மா தேதி கிழிக்கல ?
என் காலண்டர்ல நான் கிழிச்சிட்டேன்.
ஓ இது என் காலண்டராக்கும் ?
பூஜையறைக்குள் இருந்த அவளுடைய நாள்காட்டியில் தேதி 26/03/2020 வியாழன் என்று சரியாக இருந்தது. அய்யய்யோ தேதி இருபத்தாறா ? ஐசிஐசிஐ க்ரெடிட் கார்ட் ட்யு கட்டணுமே ? வண்டை வண்டையா திட்டுவானுகளே ?
தேதி 26 மார்ச் 2020, காலை நேரம் 11 : 15. நாள் # 2.
இப்படியாக தேதி, கிழமை மறந்ததால், தலைப்பில் வர வேண்டிய விவரங்கள் இடையில் வந்ததற்கு மன்னிக்கவும். இருங்க மூஞ்சைக் கழுவிட்டு வந்துடறேன் !
காலை மணி 11 : 55
ட்ரெட் மில் இருக்கும் அறைக்குள் நுழைந்தேன் !
திடுக்கிட்டுப் போனேன். பாழடைந்த பேய் பங்களாவை சினிமாவில் காட்டுவார்களே, அதற்குள்ளே ஒட்டடைக்குள் இருக்கும் நாற்காலி போல கடுமையான தூசிப் படலத்துடன் அது கிடந்தது !
அடிப்பாவி, வழக்கமா துணி காயப்போடுவியே, அதுக்கு கூட இது யூஸ் இல்லாமப் போச்சா ?
பந்தாவுக்கு இருபதாயிரம் கொடுத்து வாங்கி மூலைல வச்சி ஒண்ணுமே செய்யலைன்னா இப்படி தூசிதான் படியும் ?
ஏன் நீ நடந்தா என்ன ?
எனக்கா தொப்பை இரண்டடி வெளிய வந்திருக்கு ?
உங்களுக்கெல்லாம் தொப்பை வரவே வராதா ? வரும் முன் காப்பவன்தான் அறிவாளின்னு நேத்து மோடிஜி சொன்னாரு.
கிழிசசாரு. அது கே.பி.சுந்தராம்பாள் சொன்னது
அது கலைஞர் எழுதின பாட்டு
அதுக்கு முன்னாடி எத்தனயோ பேர் சொன்னதுதான்.
நோ மோர் பாலிடிக்ஸ்
இது இலக்கியம்தான், பேசுங்க எனக்கு நேரமிருக்கு, சமையலெல்லாம் முடிச்சாச்சு.
இப்படித்தான் ஸோரோ கூட சாரு ஒரு நாள் வாக்கிங் போனாராம்.
இருங்க யாரோ கூப்டாப்பல இருக்கு, இதோ வர்றேங்க்கா.
யாருகிட்ட ? அப்படி ஓடோணும். எங்ககிட்டயே நக்கல். வா, அடுத்தவாட்டி புளிச்சமாவ மூஞ்சில தூக்கி வீசறேன்.
நண்பகல் மணி 12 : 10
அந்த ட்ரெட்மில் பின்புறமிருந்த மகனின் விளையாட்டுச் சாமன்களை அள்ளி ஓரங்கட்டவே பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது. ஓர் அழுக்குத்துணி எடுத்து, சுத்தமாக துடைத்து, எல்லாச் செட்டிங்குகளையும் செய்துவிட்டு, START பட்டனை அழுத்தினால் அது ஓடவில்லை !
நண்பகல் மணி 12 : 55
தொப்பல் தொப்பலாக வேர்த்து விட்டது. அதிகாலையில் இதுபோன்ற பயிற்சிகளுக்கு ஃபேன் தேவைப்படாது. அதே நினைவில் பங்குனி நடுப்பகல் வெய்யிலை நான் அலட்சியம் செய்ததற்கு நன்கு வச்சி செய்துவிட்டது !
பிற்பகல் மதியம் 01 : 15 மணி
இந்தாங்க இந்த பீன்ஸ் தண்ணியக் குடிச்சிக்கிட்டே ஓடுங்க. அடக்கருமமே என்னங்க இது ? இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா ? என்னத்த பிரிச்சி நோண்டிக்கிட்டு இருக்கீங்க ?
என்னாச்சு தெர்ல, லைட்டெல்லாம் எரியுது, ஆனா பெல்ட் ரன் ஆகல.
எப்படி ஆகும் ? நாலு வருஷத்துக்கு ஒரு தடவ தொட்டா ?
இதான் சாக்குன்னு நோண்டாத என்ன ?
கர்ரண்ட்ல விளையாட வேணாம். கஸ்டமர் கேர் போன் பண்ணுங்க.
ம்க்கும், கரோனாவோட வர்றதுக்கா ? அதெல்லாம் வேணாம்.
அப்ப விடுங்க. நீங்களா ஏதும் கைவைக்க வேணாம்.
இதென்ன ?
பீன்ஸ வேக வச்சி வடிகட்டின தண்ணி.
உவ்வேக், அழுக்கு தண்ணியா ?
சுத்தமா மினரல் வாட்டர்ல கழுவி, குக்கர்ல வேக வச்சு வடிகட்டின ஹைஜீனிக் சூப்.
உப்புச்சப்பில்லாமல் தேமேவென்றிருந்தது அந்த பானம். சிறுநீரக / பித்தப்பைகளில் கல் உருவாகுவதை தடுக்க வல்லதாம் !
நீங்க பத்து கிலோ மீட்டர் ஓடி வந்தா மாதிர் நல்லா வேர்த்துருச்சிங்க, குளிச்சிட்டு வாங்க, லஞ்ச் சாப்பிடலாம்.
ப்ரேக் பாஸ்ட் ?
ம்ம்ம் வாய்ல நல்லா வருது.
நாள் 2, பிற்பகல் மணி 2 : 05
மொச்சை, கத்திரிக்காய் போட்ட பயித்தக் குழம்புடன் அதிசுவையான சாப்பாடு.
சாலையில் தடையை மதிக்காமல் வந்த மக்களுக்கு வித விதமான தண்டனைகளைத் தரும் காட்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்தது.
இரண்டு குடிகாரர்களை சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய வைத்தார்கள். பார்க்க நகைச்சுவையாக தெரிந்து அடக்கமாட்டா சிரிப்பு வந்தாலும், இன்னொருபுறம் வேதனையும் கிளர்ந்தது.
இந்த மனுஷன் ஆட்சிக்கு வந்ததற்கப்புறம் இப்படி புது புது டிசைன் வாழ்க்கையெல்லாம் வாழ வேண்டி இருக்கே ? பத்துல அஞ்சு பேர் வெட்டியா ஊர் சுத்துனவனாத்தான் தெரியறான், மிச்ச அஞ்சு பேர் ?
தன் கடையில் வைத்து விற்க, பொருட்களை வாங்கி, அதை தன்னுடைய டிவிஎஸ் மொபட் நிறைய அடுக்கிவைத்து, உட்கார கூட இடமின்றி, ஒரு தினுசாக ஓட்டிச் சென்ற கிராமத்து ஆள் ஒருவரை, பளார் பளார் என்று கம்புகளால் போலிஸ் அடிக்க, அவர் வாய்விட்டுக் கதறியதைப் பார்த்தவுடன் கப்பென்று சிரிப்பு அடங்கிப் போனது !
துப்பாக்கிய எடுத்து சுட்டுத் தள்ளு என்று மட்டும் உத்தரவு வரட்டும், பல லட்சம் மக்களை இந்த அதிகார வர்க்கம் கொன்று போட்டு விடும். அவ்வளவு ஆணவம் அவர்களின் அடிகளில் தெரிந்தது.
பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு மருத்துவரை அடித்த பின்னர் நீ யார், அத மொத்தல்ல சொல்ல வேண்டியதுதான என்று ஒரு காவலர் கேட்டதைப் பார்த்தபோது, இவன்களுக்கு கரோனா 1000 மடங்கு தேவல போலயே எனப்பட்டது !
ஆனாலும், நம்மால் அந்த வைரஸ் யாருக்கும் பரவிவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வுக்காக இவைகளையெல்லாம் சீரணிக்க வேண்டி வருகிறது !
நாள் 2, மாலை மணி 04 : 15
வாழைக்காய் பஜ்ஜி. வர்றீங்களா ?
சுடச்சுட வாழைக்காய், வெங்காயம், ப்ரெட், அப்பளம், மிளகாய் என்று அனைத்து வகை பஜ்ஜிகளும் தட்டில் இருந்தன.
ச்சே, உலகத்தில் என்ன நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு மட்டும் ஓய்வே இல்லையே என்று கொஞ்சம் கருணை சுரக்க, மனைவியைப் பார்த்தேன்.
நாளைலருந்து உனக்கு சமையல், வீட்டு வேலைல ஹெல்ப் பண்ணப் போறேன்.
உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கடா, இன்னிக்கு மத்தியானம். நாளைக்கு என்ன சாயங்காலமா எழுந்திருப்பீங்களா ?
நாள் 2, அந்தி சாயும் மாலை மணி 05 : 30
அப்பா வாங்க செஸ் விளையாடலாம்.
சார்ரி செல்லம் அப்பாவுக்கு செஸ் விளையாடத் தெரியாது
சரி இந்த ஸ்னேக் கேம் விளையாடலாம்.
ஓ பரமபதமா ? சின்ன வயசுல விளையாடினது.
நான் சொல்லித் தரேன்.
ஓக்கே.
இருவருக்கும் தாயமே விழாமல், கேம் தொடங்கவே இல்லை.
இரண்டைப் போட்டு விட்டு, அதை உனக்கொரு தாயம், எனக்கொரு தாயம் எனப் பிரித்து, ஊழலில் அவன் பங்களித்ததைப் பார்த்தபோது, பின்னாளில் பெரிய அனில் அம்பானி, ராணா கபூர் ரேஞ்சுக்கு வருவான் என உணர முடிந்தது !
இரவு எட்டு மணி.
அறிவிருக்கா ? எத்தனை நாளா அந்தப் பேமெண்ட கொடுன்னு கேக்கறேன். இன்னிக்கு ரொம்பவும் எதிர்பார்த்தேன். நீயா போடுவேன்னு உனக்கு போனக் கூடப் போடலை. நீயும் பண்ணலை. உங்களுக்கெல்லாம் உதவின்னு எதையும் பண்ணக்கூடாதுன்றத நிருபிக்கிறீங்க இல்ல ? ச்சை.
போனில் எதிரிலிருந்தவர் என்னுடைய பிரதான சப்ளையர். இப்படி பொதுவாகப் பேசுபவர்தான், ஆனால் இந்தச் சந்தர்ப்பத்திலுமா ?
சார் என்ன கொஞ்சம் கூட நிலைமை புரியாம பேசுறீங்க ? பேங்க் எங்க இருக்கு ? நான் எப்படி உங்களுக்கு பணம் போட முடியும் ?
போய்யா அறிவுகெட்டவனே, அதெல்லாம் எல்லா பேங்கும் ரெண்டு மணி வரைக்கும் தொறந்திருந்திச்சி. வாங்கின காச கொடுக்க கறி வலிக்கும். இது உங்களுக்கு ஒரு நொண்டிச் சாக்கு. சரி விடு, தூங்கப் போற டைம்ல உன்ன நோண்ட விருப்பமில்ல. நாளைக்காவது போட்டு விடு.
பகீரென்றிருந்தது. வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பண பரிவர்த்தனைகள் எப்போதும் போல் நடந்திருக்கிறது. வங்கிக்குப் போகிறேன் என்று சொன்னாலும் அடிக்கப் போகிறார்கள். அனைவருக்கும் ஆன்லைன் ஒத்துவருவதில்லை. எனக்கெல்லாம் செக், கேஷ் பரிவர்த்தனைகளே அதிகம். என் கிளைக்குப் போக நான் பதினைந்து கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். நாளை எங்கு எப்படிப்பட்ட நூதனமான தண்டனையைப் பெறவிருக்கிறேனோ ? டிவில போட்டாச் சொல்றேன், குட் நைட்..
தொடரும்…..
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
- ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
- காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
- மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
- ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
- ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
- ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
- திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
- விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
- ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
- யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
- கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
- எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
- தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
- பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
- இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
- புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
- குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
- பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
- மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
- தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
- அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
- ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
- இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
- இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
- இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
- செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
- உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
- ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்
- மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
- கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
- யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
- என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
- '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
- ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
- ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
- டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
- திடீர் தீபாவளி இரவில்......
- ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
- விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்