கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -நாள் # 19

12/04/2020,  ஞாயிற்றுக்கிழமை

காலை மணி 10 : 00

எது இத்தருணத்தில் நடந்துவிடக்கூடாதென வேண்டுவோமோ அது நடந்துவிடுகையில், அந்தக் கசப்பை விழுங்க முடியாமல் துடிக்க நேரும்.  நெருங்கிய உறவுக்குள் ஓர் அகால மரணம்.  அதுவும் பிஞ்சு !

திடுக்கென கண்டறியப்பட்ட தீரா நோய்.  முறையான மருத்துவத்தையும், மருந்துகளையும் பெற முடியாமல், விரைந்து நிகழ்ந்துவிட்ட அநியாயச் சாவு !

ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெருங்கின உறவினர்களையும், நண்பர்களையும் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்த இந்தக் கோர மரணத்தின் இறுதிச் சடங்குகளில் கலந்துக் கொள்ள பத்து பேர் கூட வரவில்லை !

அரசின் உத்தரவுகளை மதிப்பதில் நம்மாட்களுக்கு நிகர் வெள்ளைக்காரர்கள் மட்டுமே இருப்பார்கள்.  பிஞ்சு மரணங்களை எளிதில் கிரகிக்க முடியாதென்பதால் நானும் இறுதிச்சடங்கிற்குப் போக மிகவும் தயங்கினேன்.  இருந்தும் போய்விட்டேன்.  தன் கைகளில் மரணித்தக் குழந்தையை ஏந்திய தந்தை, மாடியிலிருந்து எடுத்துவந்து வண்டியில் கிடத்தியக் காட்சி, அடிமனத்திலிருந்து கேவலை வெடித்தெழச் செய்துவிட்டது.  குழந்தை கிடத்தப்பட்டிருந்த வண்டியை, அங்கிருந்து கிளம்ப அனுமதிக்கவே மாட்டேன் எனத் தாய் ஒரு கையால் அழுந்தப் பிடித்தபடி சாலையில் உருண்டழ, அவர் கைகளை பல கரங்கள் சேர்ந்துப் பிடுங்கியபின், அந்த வண்டி நகர்ந்தது !

பிற்பகல் மணி 02 : 00

பார்க்கவொண்ணாக் காட்சிகளை பார்த்துவிட்டு கனத்த மனத்துடன் வீட்டுக்கு வந்து செய்திகளைப் பார்த்தால், மனம் மேலும் மேலும் சிதிலமாகியதே அன்றி மீள வழியில்லை !

உரிய மருத்துவம் கிட்டாமல் மரித்துப் போன குழந்தையுடன் கதறியழுதபடி வீதியில் நடக்கும் பெண்ணொருத்தி ;

பசிக்கொடூரம் தாங்காமல் அலறிய தன் ஐந்துக் குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் ;

பசி, பிரிவு மாளாமல் தூக்கிட்டுச் செத்துப் போன சென்னை அம்பத்தூர் பீகார் தொழிலாளி

இதற்கும் மேல் டிவி பார்ப்பது நம்மையும் தற்கொலைக்குத் தூண்டுமென அஞ்சி, அதை அணைத்துவிட்டேன் !

பின்னிரவு மணி 10 : 30

கொரோனா வீட்டுச்சிறை ஆரம்பமானப் பொழுதுகளிலிருந்தே,  நாட்டில் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு விடக் கூடாதே எனப் பதறிக்கொண்டிருந்தோம்.  ஆனால், வட மாநிலங்களில்  தொழிலாளர்களை நடக்கவிட்டும், பட்டினி போட்டும் பலிபோட,  இங்கு நம்மூரில் அப்படி ஓர் அவலங்கள் நிகழாமல் பார்த்துக் கொண்டவர்கள் தன்னார்வலர்கள் !

நாடு முடங்கிய மறுநாளே, வீடற்ற, உறவுகளற்ற, கைவிடப்பட்ட பல முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், மன நிலை பாதிக்கப்பட்டோரை தேடித் தேடி தன்னார்வலர்கள் உணவளித்தனர்.  அப்படி உணவளித்த ஓர் உடற்பயிற்சி ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த காவல்துறை பற்றியெல்லாம் நீங்களும் வாசித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள் !

இப்பேரிடர்ச் சூழலில் அனைத்தையும் அரசே பார்த்துக் கொள்ளட்டுமென பிரதான எதிர்க்கட்சியால் வாளாவிருக்க முடியும்.  ஆனால் ஸ்டாலின் மாற்றிச் சிந்தித்தார்.  அரசு அதன் வேலையைப் பார்க்கட்டும்.  எதிர்க்கட்சி அது அதன் வேலையைப் பார்க்கும் என்று தொடக்கத்திலிருந்தே தன் கட்சிப் பிரமுகர்களை வீட்டிலிருந்தபடியே அலைபேசியில் அழைத்து, அவர்களை  பொதுமக்களுக்கு எவ்வகையிலெல்லாம் உதவ முடியுமோ, அதைச் செய்யுங்கள் என்று தூண்டிய வண்ணமிருந்தார் !

மருத்துவ உபகரணங்கள் முதல் அத்தியாவசிய மளிகை, காய்கறி, பழங்கள், உணவு என திமுக சார்பாக தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குவரை விநியோகிக்கப்பட்டன !

கட்சி சார்பின்றி வாடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் இது வழங்கப்பட்டது.  கடைத் தேங்காய்களை எடுத்து வழிப் பிள்ளையார்களுக்கு உடைத்துக் கொண்டிருந்த எடப்பாடி அரசுக்கு எங்கோ எரிந்திருக்கிறது !

திமுக மட்டுமன்றி, இஸ்லாமிய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பெரிய கம்பெனிகள் என்று பலரும், இந்தச் சூழ்நிலையில் எவரும் துவண்டு போய்விடக் கூடாதென, மக்களை அரசுக்கு மேலாகவும் கவனித்துக் கொண்டனர் !

2015 -இறுதியில் செயற்கை வெள்ளப் பேரிடரின் போது, தன்னார்வலர்களிடமிருந்து பொருட்களைப் பிடுங்கி, அம்மையார் ஸ்டிக்கர்களை ஒட்டிய பழக்கம், ஈனபுத்தி,  இன்னும் அவர்களை விட்டுப் போகாத காரணத்தினால், குயுக்தியாக ஒரு சுற்றறிக்கையை விட்டிருக்கின்றனர் !

அதன்படி, தன்னார்வலர்கள் இனி தாமே களத்திற்குச் சென்று விநியோகிக்க அனுமதியில்லையென்றும்,  உதவிப் பொருட்களை அரசு நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும் நிர்பந்தித்திருக்கிறார்கள்.  கேட்டால் தொற்று நோய், 144 தடையுத்தரவு என்று சாக்கு போக்கு !

உடனடியாக ஸ்டாலினும், கமலும் இதற்கு கடுமையான எதிர்வினையாற்ற, இதர தன்னார்வல அமைப்புகளும் கைகோர்த்திருக்கின்றன, நல்லதே நடக்கும் !

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்